திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் சேவல் உருவம் பொறித்த கந்தசஷ்டி திருக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஜாங்க திருக்கோலத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து, பலரும் காப்பு கட்டித் தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
இந்த விழாவில் நத்தம், செங்குறிச்சி, செந்துறை, மணக்காட்டூர், கம்பிளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, நாளை முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், வியாழக்கிழமை சிவ உபதேச திருக்காட்சியும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, வருகிற 13-ஆம் தேதி அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல் நிகழ்ச்சியும், 14-ஆம் தேதி வேல்வாங்கும் திருக்காட்சியும் இடம்பெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, மறுநாள் 16-ஆம் தேதி காலை திருக்கல்யாண உற்சவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. விழிக்கான ஏற்பாடுகளைப் பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன் தலைமையிலான விழாக்குழுவினர் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.









