கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கண் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி பவுர்ணமியன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் கோவில்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதனையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த தென்னமாதேவி, மேலமங்கலம், தென்மங்கலம், சாலை அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தென்னமாதேவியில் உள்ள சுடுமண் சிற்ப குழுவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் 50க்கும் மேற்பட்ட ரகங்களில் அகல் விளக்குகளைக் தயாரித்து வருகின்றனர். இங்கு ஒரு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான அகல் விளக்குகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இந்தக் கடைகளில் ஒரு திரி முதல் 5 திரி விளக்குகள், மேஜிக் லேம்ப், ரெயின்போ விளப்புகள், ஹாங்கிங் டூம் லாம்ப், தட்டு டூம் லாம்ப், குபேர விளக்கு, கலச விளக்கு, வேல் அகல் உள்ளிட்ட பலவிதமான நவீன மற்றும் பாரம்பரிய ரக விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயார் செய்யப்படும் அகல் விளக்குகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, கோயம்புத்தூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.









