தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், திருச்சியின் மையப்பகுதிகளான என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம், மேலரண் சாலை, மெயின்கார்டு கேட் மற்றும் நந்தி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் பண்டிகை காலத்தில் வழக்கமாக களைகட்டும் என்றார்.
ஆனால், கடந்த 10 நாட்களாக சட்டவிரோத தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் உள்ளே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 70 சதவீத வியாபாரம் சரிந்து வெறும் 30 சதவீதம் மட்டுமே வணிகம் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, இப்பகுதிகள் நான்-வெண்டிங் ஜோன் (தரைக்கடைகள் இல்லாத மண்டலம்) என அறிவிக்கப்பட்டு, தரைக்கடை வியாபாரிகளுக்கு 5 மாற்று இடங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இருப்பினும், பண்டிகை நேரத்தைப் பயன்படுத்தி சிலர் வியாபாரிகளின் கடைகளுக்கு முன்பாக தரைக்கடை அமைக்க ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடம் ஒதுக்குகின்றனர். மாநகராட்சி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அகற்றிய 10 நிமிடங்களிலேயே மீண்டும் கடைகள் போடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மாநகராட்சியும் காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், நாளைய தினம் (நவ. 7) என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில் தெரு, தேரடி பஜார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வணிகர்களும், ஊழியர்களும் கடைகளை அடைத்து வீதியில் இறங்கிப் போராடுவோம் என்றும், அன்றைய நாளை கருப்பு தீபாவளியாக அனுசரிப்போம் என்றும் கோவிந்தராஜுலு எச்சரித்தார்.









