திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டுக்கான தீபத் திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில், திருவிழாவை முன்னிட்டு கோவிலின் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட நான்கு பிரதான கோபுரங்கள் மற்றும் கிளி கோபுரம் உள்பட ஐந்து சிறிய கோபுரங்கள் என மொத்தம் ஒன்பது கோபுரங்களும் வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அமாவாசை தினமான இன்று முதல் தீபத் திருவிழா நிறைவடையும் வரை இந்த ஒன்பது கோபுரங்களிலும் மின்விளக்குகள் தொடர்ந்து எரியும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தின் தோற்றம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.









