அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு தட்டாரத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில், பாரம்பரியமிக்க 'வேல் வாங்கும்' வைபவம் மிகுந்த பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, மூலவர் பாலமுருகப்பெருமானுக்குப் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானின் திருவுருவம், மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், அருகிலுள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு வேலுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. பூஜையின் போது, வேல் ஏந்திய சிவாச்சாரியார்கள் அருள் வந்து ஆடிய காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட வேல், மீண்டும் மேளதாளங்களுடன் பாலமுருகன் ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த 'வேல் வாங்கும்' நிகழ்வில், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.









