திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, மகாலட்சுமி சன்னதியில் சிறப்பு குபேர பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாலட்சுமியை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானதாகவும் திருவாரூர் தியாகராஜர் கோவில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இத்தகைய ஆன்மிகச் சிறப்பு மிக்க திருக்கோவிலின் முதல் பிரகாரத்தில் யோக நிஷ்டையில் அருள்பாலிக்கும் மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று மகாலட்சுமிக்கு சிறப்பு குபேர பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மகாலட்சுமி சன்னதியில் குபேர பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி, நேற்றைய முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனைத் இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க மகாலட்சுமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதனைத் தொடர்ந்து மகாலட்சுமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மகாலட்சுமி அம்மனுக்கு குபேர பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. குபேர பூஜையில் கலந்து கொண்டு மகாலட்சுமியை வழிபட்டால் குடும்பத்தில் சகல செல்வங்களும் பெருகும், வியாபாரம் மற்றும் தொழில்களில் வளர்ச்சி ஏற்படும், வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் திருவாரூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து குபேர பூஜையில் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.
ஆன்மீகம்
தியாகராஜர் கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு குபேர பூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்!
🕒 9 நவ., 2026, 07:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மகாலட்சுமி சன்னதியில் சிறப்பு குபேர பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








