மயிலாடுதுறை திருஇந்தளூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பரிமளரெங்கநாதர் கோயிலில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமான இக்கோயில், திருமங்கையாழ்வார் உள்ளிட்டோரால் பாடப்பட்ட பெருமை பெற்றதுடன், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் 30 நாள் காவிரி துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் மற்றும் பரிமளரெங்கநாயகி தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றன. பின்னர், பட்டாச்சாரியார்கள் திருமாங்கல்யதாரணம் செய்து வைத்து மகா தீபாராதனை காட்டினர். அதைத்தொடர்ந்து நலுங்கு உற்சவம் நடைபெற்றது.
வரும் 16-ஆம் தேதி துலா உற்சவ பெருந்திருவிழாவின் 9-ஆம் திருநாளை முன்னிட்டு காலை திருத்தேர் உற்சவமும், மதியம் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.









