நாகப்பட்டினம் மாவட்டத்தில் 'மை பாரத்' (My Bharat) அமைப்பு சார்பில் 'விக்சித் பாரத் 2047' இளையோர் கலைத் திருவிழா மற்றும் பல்வேறு போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.
நீலப் புரட்சியின் மூலம் பொருளாதார மேம்பாடு, இளைய தலைமுறைகளைக் கொண்டு மனிதவள மேம்பாட்டு சக்திகளை உருவாக்குதல் மற்றும் வருங்கால இந்தியாவை கட்டமைப்பதில் இளையோர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளையோர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இளையோர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏ.டி.எம். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியை பிரபாவதி வரவேற்புரை ஆற்றினார். நாகை மாவட்ட 'மை பாரத்' அமைப்பின் இளையோர் நல அலுவலர் அர்ஷா ராஜ் தலைமை தாங்கிப் பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் தங்க மோகன், பாரத பிரதமரின் கனவுத் திட்டமான 2047-க்குள் இந்தியா வல்லரசாக விளங்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இளையவர்களுக்கான பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இவை மாணவர்களிடம் தேசப்பற்றையும் தன்னம்பிக்கையையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும், இளமைப் பருவத்தில் திட்டமிடுதலில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற இத்தகைய அமைப்புகள் உதவியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சதீஷ் கலந்துகொண்டு, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியினை பேராசிரியை சாவித்திரி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.









