திருச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பொதுமக்களைத் தடையின்றிச் சென்றடைவதை அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துரை வைகோ கேட்டறிந்தார். மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜாத்தி சல்மா, கிறிஸ்டோபர் திலக், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.









