மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில், வழக்கத்திற்கு மாறாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, மாயூரநாதர் சுவாமியிடம் வஜ்ராயுதம் பெற்று, மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலின் கீழவீதியில் நடைபெற்ற இந்த சூரசம்ஹார விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, சூரசம்ஹாரத்திற்காக கோயில் பிரகாரத்தில் இருந்து வேல் பெற்றுக்கொண்டு புறப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை, கோயில் யானை அபயாம்பிகை தனது துதிக்கையை உயர்த்தி வணங்கி வரவேற்றது. தொடர்ந்து கோயில் வாசலில் சுவாமி புறப்பட்டபோது, தனது துதிக்கையால் முருகப்பெருமானை மென்மையாகத் தொட்டு ஆசீர்வதித்து சம்ஹார நிகழ்ச்சிக்கு வழியனுப்பி வைத்தது.
முருகப்பெருமானை யானை அபயாம்பிகை துதிக்கை தூக்கி வணங்கியதும், தொட்டு ஆசீர்வதித்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான காட்சியை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு ரசித்ததுடன், செல்போன்களிலும் படம் பிடித்து மகிழ்ந்தனர்.









