தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்படும் பொருட்கள் சட்ட விதிகளின்படி முறையாக அழிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 14 வழக்குகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 18 வழக்குகள் என மொத்தம் 32 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 372.522 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை அழிக்க ராமநாதபுரம் சரக போதைப்பொருள் அகற்றும் குழு உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மணிவண்ணன் தலைமையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள ஒரு தனியார் கழிவு எரியூட்டு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் போதைப்பொருட்கள் அனைத்தும் தீயிட்டு முழுமையாக அழிக்கப்பட்டன. இந்நிகழ்வின்போது போதைப்பொருள் அகற்றும் குழுவின் உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.









