திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
வாணியம்பாடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு கிரிசமுத்திரம் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாணியம்பாடி வட்டாட்சியர் ஜெகதீசன், நகராட்சி ஆணையாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை மாசு கட்டுப்பாட்டு பொறியாளர், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், கிரிசமுத்திரம் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஏற்கனவே பாலாற்றில் தோல்கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்களும், நிலத்தடி நீர் மட்டமும் கடுமையாக மாசடைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், புதிய கழிவுநீர் நிலையம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறக்கூடும் எனக் கூறி தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஏற்க மறுத்த பொதுமக்கள், திட்டத்தைக் கைவிடக் கோரி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் இரு தரப்பினரிடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.









