திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முறையாக மருத்துவம் படிக்காமல், தனது வீட்டிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் தலைமை மருத்துவரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் கிராமம் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (53). இவர் உரிய மருத்துவக் கல்வி அல்லது தகுதி எதுவும் பெறாமல், தனது வீட்டிலேயே அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கணேசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 6-ம் தேதி மதியம் சுமார் 1.15 மணியளவில் அம்பலூர் கிராமத்திற்கு நேரில் சென்ற தலைமை மருத்துவர் கணேசன், தனலட்சுமி வீட்டிற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த பொதுமக்களுக்கு ஊசி போடுவது மற்றும் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, தனலட்சுமியைக் கைது செய்த மருத்துவர் கணேசன், அவரிடமிருந்த குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களைப் பறிமுதல் செய்தார். பின்னர் அவரை அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையான மருத்துவப் பட்டம் பெறாமல் பொதுமக்கள் உயிரோடு விளையாடும் போலி மருத்துவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.









