வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்தைக்கு அணைக்கட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் இயற்கையான சூழலில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சந்தையில் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை விற்பனை நடைபெறும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் தேவை அதிகரித்ததால், தரம் மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு ஜோடி ஆடுகள் ரூ.45 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த ஆடுகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர்.









