மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் பகுதியில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சேவைகள் மற்றும் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஊராட்சிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், காவல் நிலையத்தின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செம்பனார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள், வேளாண்மைத் துறை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தரமான விதைகள், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் உரிய நேரத்தில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், செம்பனார்கோவில் ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை, செயல்பாடுகள், வங்கிக் கடன் இணைப்பு, கடன் உதவிகள் மற்றும் சுழல் நிதி வழங்குதல் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.









