தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தேனி சமதர்மபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், அந்த கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மகி என்ற மகேஸ்வரன், சூர்யாமூர்த்தி, தீபன் ராஜ், பிரனேஷ், ஆகாஷ் மற்றும் கௌதம் ஆகிய ஆறு பேரை தேனி காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் தேனி நகர காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர். பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தேனி லட்சுமிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜ், கைது செய்யப்பட்ட ஆறு இளைஞர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆறு இளைஞர்களும் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.









