கரூர்: கரூர் தாந்தோணிமலை பகுதியில் உள்ள நீர்வளத்துறை உதவி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் குளித்தலை காவிரி ஆற்றுப் பிரிவு வடிநிலக் கோட்டத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தாந்தோணிமலை வாஞ்சிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, சுவாமிநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பிற பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.









