ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுடன் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கல்வி உரிமைச் சட்டம் (RTE) தொடர்பான நடவடிக்கைகள், பள்ளிக்கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், குழந்தை திருமணத் தடுப்பு மற்றும் அது தொடர்பான புகார்கள் குறித்து சமூக நலத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலவரம் குறித்து காவல்துறையினரும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் ஆய்வுகள் குறித்து தொழிலாளர் நலத்துறையும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. இளம் வயது கர்ப்பங்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் தாக்கல் செய்தனர்.
குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கிராம, பேரூராட்சி மற்றும் நகராட்சி அளவில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் இளம் வயது கர்ப்பங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், நிதி ஆதரவு பெறும் குழந்தைகளின் நிலை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் இல்லங்களின் பராமரிப்பு, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மற்றும் பள்ளிகளில் தீயணைப்புத் துறை மூலம் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்ட விவரங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.









