திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாணவிகளின் எதிர்கால இலக்குகள் மற்றும் தேவைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற மாணவி ஒருவர் எழுந்து நின்று, கீழ்பென்னாத்தூர் சமூகநீதி மாணவியர் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், மர்ம நபர்கள் விடுதி வளாகத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி நின்று உள்ளே இருக்கும் மாணவிகளை நோட்டமிடுவதாகவும், இதனால் விடுதியில் தங்கும் மாணவிகள் தினமும் பெரும் அச்சத்துடன் பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருவதாகவும் அவர் பகிரங்கமாகப் புகார் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாணவி முன்வைத்த இந்தத் திடீர் குற்றச்சாட்டு, அங்கு அமர்ந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் 95 முதல் 98 சதவீதம் வரை தேர்ச்சி பெற்று சாதனை படைக்கும் இப்பள்ளியில், மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் இல்லை என்றும், விளையாடுவதற்கு விளையாட்டுத் திடல் இல்லை என்றும் மாணவிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.
மாணவிகளின் புகார்களைக் கேட்ட மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக மாணவி நேரடியாகப் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









