கரூர் மாவட்டம், மூலக்கட்டானூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாளர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
கரூர் - திருச்சி சாலையில், காந்திகிராமம் அருகே உள்ள மூலக்கட்டானூரில் டாஸ்மாக் கடை எண் 5033 செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக கண்ணனும், விற்பனையாளராக ரமேஷும் பணியாற்றி வருகின்றனர். இன்று மதியம் 12 மணியளவில், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மது வாங்க வந்தபோது, வரிசையில் நிற்பது தொடர்பாக பணியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதில், இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடை மூடப்பட்டிருந்ததால் மதுப்பிரியர்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.









