திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் இந்து நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
தீபாவளி விடுமுறைக்கு முந்தைய நாள், அப்பள்ளியில் பணியாற்றும் சான்றோர்குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன், இரண்டாம் வகுப்பு மாணவியை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரைத் தாக்கியுள்ளனர்.
காவல்துறை விசாரணை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகா ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பரபரப்பான சூழல்:
ஆசிரியரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.









