மதுரை மாவட்டம், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் தண்ணீர் திறக்கக்கோரி மனு அளித்துவிட்டு திரும்பிய விவசாய சங்க பிரதிநிதி மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு அளித்துவிட்டு மேலூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் சுங்க ஊழியருக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்தப் பிரதிநிதியைச் சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இதனைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.









