திருச்சி மாவட்டத்தில் திருநங்கையர்களின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் நோக்கிலும் 'அரண் இல்லம்' அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் அறிவித்துள்ளார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் கீழ், திருநங்கை அடையாள அட்டை பெற்றுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 25 திருநங்கையர்கள் எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தில் தங்குவோருக்கு உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாகப் பூர்த்தி செய்யப்படுவதுடன், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரப் பயிற்சிகள், மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், இந்த 'அரண் இல்லத்தை' திறம்பட நிர்வகிக்கத் தகுதியுள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனங்கள் இந்தியச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதோடு, திருநங்கையர் நலனுக்காகக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தாக்கம் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். திருநங்கையர்கள் தலைமையிலான அல்லது அவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிர்வாகக் குழுவைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தங்கும் இல்லமானது திருநங்கையர்களுக்குப் பாதுகாப்பானதாகவும், போதிய சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளுடனும், திறன் பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவான இடவசதியைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். மேலும், தகுதிவாய்ந்த மனநல ஆலோசகர் வாரந்தோறும் மற்றும் தேவைக்கேற்ப நேரில் வந்து ஆலோசனை வழங்குவதை அந்த நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் தொண்டு நிறுவனங்கள், உரிய ஆவணங்களுடன் வரும் 21.11.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.









