அரியலூர் மாவட்டத்தில் ஐயப்பன் கோயில்களில் கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, கார்த்திகை முதல் தேதியன்று பக்தர்கள் மாலை அணிந்து, கடுமையான விரதத்தைத் தொடங்கி இருமுடி கட்டிச் செல்வது வழக்கமாகும்.
இதையொட்டி, கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஐயப்பன் மற்றும் பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயில்களில் பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது மண்டல விரதத்தைத் தொடங்கினர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில்கள் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்பட்டன.









