நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.11.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாகுபடி நிலவரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன், நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். நவம்பர் 23 வரையிலான நிலவரப்படி, 553.14 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முடிய வேண்டிய இயல்பு மழையளவு 680.78 மி.மீ. ஆகும். இருப்பினும், இயல்பு மழையளவை விட 127.65 மி.மீ. குறைவாகவே மழைபொழிவு பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
நடப்பாண்டில் அக்டோபர் 2026 வரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாகுபடி விவரங்களை வெளியிட்ட ஆட்சியர், நெல் 794 எக்டர், சிறுதானியங்கள் 48,118 எக்டர், பயறு வகைகள் 4,533 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 20,264 எக்டர், பருத்தி 1,416 எக்டர் மற்றும் கரும்பு 8,507 எக்டர் என மொத்தம் 83,632 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய், மரவள்ளி, வெங்காயம், மஞ்சள் மற்றும் வாழை என மொத்தம் 9,201 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கேற்ப தடையின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்' குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 50 சதவீத விவசாயிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ தங்களது நில உடைமைகளை ஆதார் எண்ணுடன் இணைத்து விவசாய அடையாள எண் பெற்றுப் பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டார். விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தத் தகவலை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.









