சட்டங்களால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என்றும், குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைப்பதன் மூலமும், சமூகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டாலுமே இதனைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 27) விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் டெவலப்மென்ட் (PAD) அமைப்பு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் குழந்தைத் திருமண ஒழிப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது: "சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. வெறும் சட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளால் மட்டுமே குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. இந்த சமூகப் போராட்டத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, திருமணச் சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் குழந்தைத் திருமணத்திற்குத் துணை நிற்கவோ அல்லது அதில் பங்கேற்கவோ மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகமும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும்போதுதான் நாம் இந்த இலக்கை அடைய முடியும். மேலும், பெண் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துக் குழந்தைகளையும் உயர்கல்வி வரை படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோரும் அரசும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். அறிவார்ந்த சமுதாயம் உருவாவதன் மூலமே இது போன்ற சமூக அவலங்களை நம்மால் விரட்ட முடியும். ஆகவே, குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, பீப்பிள்ஸ் ஆக்ஷன் ஃபார் டெவலப்மென்ட் (PAD) நிறுவனத்தின் நிறுவனர் லூசியல் ஜாய், செயல் இயக்குநர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், திட்ட மேலாளர் ராம்கி உள்ளிட்டோர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.









