தஞ்சாவூர் மாவட்டத்தின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.56.47 கோடி மதிப்பீட்டிலான 107 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.3.68 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 6 சுகாதார நிலையக் கட்டிடங்களைத் திறந்து வைத்த அவர், மருத்துவத் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 39 பேருக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இத்திறப்பு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார். அதன்படி, அழகியநாயகிபுரத்தில் பொது சுகாதார அலகு கட்டிடம், பெரியக்கோட்டை, ஏனாதி மற்றும் பெருமகளூர் ஊராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள், மற்றும் கீழக்குறிச்சி, திருச்சேறை ஊராட்சிகளில் துணை சுகாதார மையக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.3.68 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இதன் மூலம் அப்பகுதிகளில் அடிப்படை மருத்துவ சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பட்ஜெட் கூட்டத்தொடரில் தஞ்சை மாவட்டத்திற்காக ரூ.56.47 கோடியில் 107 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான சிறப்பு மருத்துவ உபகரணங்கள், கேத் லேப், இதய நுரையீரல் இயந்திரங்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் அமைத்தல் மற்றும் உள், வெளிநோயாளிகள் பிரிவுகளை மேம்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகள் அடங்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் காலியாக இருந்த 4,724 பணியிடங்கள் மாவட்ட நலச் சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 39 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பொது ஆய்வுப் பணிக்குழுமத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவத் துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநர் சீதாலெட்சுமி, மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் அழகுமீனா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் அரவிந்த், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜ்மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், குடும்ப நல இயக்குநர் திலகம், மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மணிமேகலா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.









