தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், அங்கு பணியாற்றியபோது எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையக் குற்றப்பிரிவுக்கும், பின்னர் சூரங்குடி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மாந்தை, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி வழங்குவதற்காக அவர் பணம் பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு விரிவான விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில், முறைகேடு புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் சுதாகரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.









