வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் (VMES) 125 ஆண்டுகளாக ஆற்றி வரும் கல்விச் சேவையைப் போற்றும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்ற இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவர் எஸ். கமலேஷ், தனது அநேக கவிதைத் திறமையால் நடுவர்களின் பாராட்டைப் பெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு நினைவுக் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்க பொதுச்செயலாளர் புதுப்பேட்டை அப்துல்லா பாஷா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்விச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், இஸ்லாமிய கல்லூரி முதல்வர் முனைவர் காதர் நவாஸ், முன்னாள் முதல்வர் முனைவர் டி. முகம்மது இலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், வாணியம்பாடி நகருக்கும் பெருமை சேர்த்த மாணவர் எஸ். கமலேஷை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.









