விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெள்ளைக்கரை சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 7 பேருக்குத் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மொத்தம் 26 மாணவர்களில், சன்னாசி (12), வருண் (8), ஹன்சிகா (9), அபிநய் (10), சிவப்பிரியா (10), ஹரிகரன் (11), மற்றும் தன்யா (10) ஆகிய 7 குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் மயக்கம் உண்டானது. உடனடியாகப் பாதிக்க 7 மாணவர்களும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாகப் பள்ளிக்கு விரைந்து சென்று, ஆசிரியர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிய உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.









