திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாதது அரசியலமைப்புச் சீர்குலைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நாளை தீபம் ஏற்றுவதை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ஒவ்வொரு பக்தரும் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பஞ்சோலி அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக, தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்றும், மலை அமைந்துள்ள முழு பகுதியிலும் மத்திய ரிசர்வ் காவல் படையை (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசும் கோயில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள உச்சநீதிமன்றம், இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும் துணிச்சலாகவும் மீறும் செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளது. மேலும், கோயில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.









