மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மற்றும் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் ஓரிரு நாட்களில் திடீரென உயிரிழந்தன. அதனைத் தொடர்ந்து, கொக்குகள் மற்றும் வான்கோழிகளும் இறந்தன. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.
மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சித்தமல்லி, கஞ்சாநகரம், செம்பனார்கோவில், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக காகங்கள் இறந்து சாலைகளிலும், வீடுகளின் கூரைகளிலும் விழுந்து வருகின்றன. அண்டை மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் இந்நோய் பரவியிருக்கலாமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த கால்நடைத்துறை இணை இயக்குநர் அன்பரசன் கூறுகையில், உயிரிழந்த காகங்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் (Bird Flu) காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாமா என்பது பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்தார்.









