திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு வெவ்வேறு ஆன்லைன் மோசடி சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடன் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.8.31 லட்சமும், செல்போன் செயலி மூலம் இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.68 லட்சமும் மர்ம நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடன் தருவதாகக் கூறி ரூ.8.31 லட்சம் மோசடி: திருச்சியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை, கடந்த ஜூலை 29-ம் தேதி தொடர்புகொண்ட மர்ம நபர், தான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி ரூ.5 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்தப் பெண், கடன் பெறுவதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடன் தொகையை விடுவிக்க பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, அந்தப் பெண்ணிடமிருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.8,31,367-ஐ மர்ம நபர்கள் பறித்துள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
செல்போன் செயலி மூலம் வங்கிப் பணம் திருட்டு: மற்றொரு சம்பவத்தில், திருச்சியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் கண்ட செல்போன் தீம் (Mobile Theme App) செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார். அந்தச் செயலி மூலம் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,68,236-ஐ மர்ம நபர்கள் திருடியுள்ளனர். வங்கிக்குச் சென்றபோதுதான் தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர், அதிர்ச்சியடைந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தைப் பறித்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.









