வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொரப்பாடி பகுதியில் உள்ள நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதைச் சோதிக்கவும் மாநகராட்சி அலுவலர்கள் இன்று காலை அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதாகத் தெரிவித்து ஆத்திரமடைந்த வியாபாரிகள், வேலூரில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகாயம் காவல்துறையினரும், வேலூர் கோட்டாட்சியரும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே, முறையான அறிவிப்பின்றி ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரி மீது வியாபாரிகள் தரப்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாகவே படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்தனர்.









