திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் இயங்கி வரும் தவெக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு, கட்சித் தொண்டர்களும் மகளிர் அணியினரும் திடீரெனத் திரண்டனர். பின்னர் மாவட்ட அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்ட அவர்கள், மாவட்டச் செயலாளர் சத்யாவின் படத்தின் மீது கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், சத்யாவைக் கண்டித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் சத்யா பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும், பெண் நிர்வாகிகளிடம் இழிவான முறையில் பேசுவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்களும் கூறப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாவட்ட கட்சி அலுவலகத்தின் முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.









