திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (39). இவரது மனைவி லாவண்யா (23). இவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லாவண்யாவுக்கும் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த துளசிமணி (28) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை முத்துக்குமார் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லாவண்யா, தனது கள்ளக்காதலன் துளசிமணி மற்றும் அவரது நண்பரான எமக்கலாபுரத்தைச் சேர்ந்த அழகுசின்னு (43) ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். மேலும், அவர் மீது கொலைவெறித் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த முத்துக்குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் காங்கேயன், சுரேஷ், மணி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், முத்துக்குமாரைக் கொலை செய்ய முயன்ற லாவண்யா, துளசிமணி, அழகுசின்னு ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.









