நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், இராசிபுரம், பரமத்திவேலூர், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 399 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.53.23 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திலீப் (நாமக்கல்), சந்திரசேகர் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், 399 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,005 உறுப்பினர்கள் பயனடையும் வகையில் இக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், "மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்கே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பிற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வங்கிக் கடன் உதவி என்பது வெறும் உதவியல்ல, மாறாக பெண்களின் உரிமை" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'சிங்கப் பெண்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், ஆட்சியின் பொறுப்பேற்றவுடன் 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.658 கோடி மகளிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளில் மட்டும் 2026-ஆம் ஆண்டில் ரூ.649 கோடி இலக்கில் ஏற்கனவே ரூ.388 கோடி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதால் மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருவதாகவும், சுயஉதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழாவில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், உதவித்திட்ட அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.









