மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வெற்றி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபை கூட்டங்கள் மாவட்டத்திலுள்ள 241 ஊராட்சிகளிலும் நடைபெற்றது.
செறுதியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பங்கேற்றுப் பேசினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் முற்றிலும் நடைபெறாத முன்மாதிரி கிராமமாக செறுதியூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைக் சிறப்பிக்கும் வகையில், கிராமத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு குழந்தை திருமணம் ஒழிப்புக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, குழந்தை திருமணத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெண்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேபோல், பரசலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வெற்றி வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து ஊராட்சி செயலாளர் மனோகர் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். தகுதியான பயனாளிகள் மட்டுமே முறையான விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.









