பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை முழுவதுமாகத் தடுத்து நிறுத்தக் கோரியும் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகளால் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் பென்சீன் கலந்து வருவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், 2020-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தை மீறி, பழைய கிணறுகளுக்குள்ளேயே பக்கவாட்டுக் கிணறுகள் அமைத்தும், அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களைப் பயன்படுத்தியும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சட்டவிரோதப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில் ; மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அடிக்கடி கேட்கும் பயங்கர வெடிச்சத்தத்திற்கு ஓஎன்ஜிசி-யின் பணிகளே காரணம். வானத்தில் ஜெட் விமானம் செல்லும்போது சத்தம் மட்டுமே கேட்கும் நிலம் அதிராது.
ஆனால், இங்கு கேட்கும் சத்தத்தால் நிலம் குலுங்குகிறது. வீட்டுச் சுவர்களில் விரிசல் விழுகிறது. குழந்தைகள் அச்சத்தில் அலறி அடித்து ஓடுகின்றனர். ஒஎன்ஜிசி பணிகளை நிறுத்தியபோது கேட்காத சத்தம் பணிகளை துவங்கியதும் கடந்த 17-ஆம் தேதி முதல் மீண்டும் இந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது.
பழைய கிணறுகளில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக 30 அடி நீளமும், 5 அங்குல அகலமும் கொண்ட 'பெர்பரேட்டிங் கன்' (Perforating Gun) மற்றும் 'ஷேப்ட் சார்ஜஸ்' (Shaped Charges) எனப்படும் வெடிமருந்துகளைக் குழாய்க்குள் இறக்கி வெடிக்கச் செய்கின்றனர். நொடிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் பாயும் இந்த 'ஹை வெலாசிட்டி மெட்டல் ஜெட்' (High-Velocity Metal Jet) தொழில்நுட்பம், இரும்புக் குழாய் மற்றும் சிமெண்ட் பூச்சைக் கிழித்துக்கொண்டு பூமிக்கடியில் உள்ள பாறைகளை நொறுக்குகிறது. இதனால் ஏற்படும் அதிர்வே நிலத்தில் உணரப்படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழுவின் ஆய்வறிக்கையைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவல்துறை பாதுகாப்புடன் நடக்கும் ஓ.என்.ஜி.சி பணிகளைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.









