ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த மாதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாறாயிபாளையம் கிராமத்தில், தனியார் நபருக்கு கல் குவாரி அமைக்க கனிமவளத்துறை வழங்கிய உத்தரவை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாறாயிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கல்குவாரி அமைக்க கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் உத்தரவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இப்பிரச்சினைக் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.









