போதைப்பொருள் இல்லாத ராமநாதபுரம் மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள ஹரி கிரன் பிரசாத் பல்வேறு தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
ராமேஸ்வரம் ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமாக விளங்குவதால், தினந்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து மாவட்ட எஸ்பி ஹரி கிரன் பிரசாத் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். அப்போது, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் எஸ்பி ஆலோசனை நடத்தினார். விடுதிகளில் தங்குவோரின் ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் குறித்த முழு விவரங்களையும் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், அனைத்து தங்கும் விடுதிகளிலும் அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரியின் தொலைபேசி எண்களைப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின் உச்ச கட்டமாக, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "போதைப்பொருளுக்கு இல்லை சொல்லுங்கள்; பாதுகாப்பான ராமநாதபுரத்திற்கு ஆம் சொல்லுங்கள்" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டும் பணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.









