அந்தியூர் அடுத்த பர்கூர் வனசரகத்தில் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து, செல்பி எடுத்தல், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றல், வன விலங்குகளுக்கு உணவளித்தல், துன்புறுத்தக்கூடாது என, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த கார்த்திகை தீபத்தன்று, அந்தியூரை சேர்ந்த இன்ஸ்டாகிராம் ஜெயசந்திரன், 30; என்பவர், பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட, அடர்ந்த வனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரி சித்தேஸ்வரர் கோவிலுக்கு, தனது குழுவினர் 4 பேருடன் சென்றுள்ளார். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களைத் தவிர, வெளியாட்கள் எவரும், இந்தக் கோவிலுக்குச் செல்லவோ, வழிபாடு நடத்தவோ வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், பர்கூர் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜெயச்சந்திரன் மற்றும் நான்கு பேர், கோவிலுக்கு செல்லும் வழியில் ஓய்வெடுத்தும், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கோவில் பண்டிகை நிகழ்வுகள் போன்ற பல்வேறு காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் ட்ரோன் கேமராக்களைப் பறக்கவிடவோ, படம் பிடிக்கவோ முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி அதனை மீறி ட்ரோன் கேமராவால் வனப்பகுதியை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பர்கூர் வனத்துறையினர், ஜெயசந்திரன் மீது, வனக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ட்ரோன் கேமராவை இயக்குவதற்கான முறையான உரிமம் பெறவில்லை என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர். இவருக்கு, கடந்த 6 மாதத்துக்கு முன், பர்கூர் மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவளித்த குற்றத்துக்கு, அந்தியூர் வனசரகத்தில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து விவரங்களை பெற, பர்கூர் வனச்சரக அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, தொலைபேசி அழைப்பை ஏற்காமல் துண்டித்தனர்.









