நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொழில்முறைத் தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியினை இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மாதவன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000-த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
பொதுப் பிரிவில் சக்கராசனம், சர்வாங்காசனம், அகர்ண தனுராசனம் உள்ளிட்ட யோகாசனங்களும், மற்றொரு பிரிவில் லகு வஜ்ராசனம், கால பைரவாசனம் உள்ளிட்ட ஆசனங்களும் இடம்பெற்றன. இதில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு கடினமான யோகாசனங்களை சிறப்பாக செய்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.









